சென்னை,
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் (மார்ச் 19) வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி துரந்தர் 2 படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு 'துரந்தர்-1' மிகவும் பிடித்திருந்தது, ஆனால் 'தி ரிவெஞ்ச்' அதன் பிரம்மாண்டத்திலும் ஆன்மாவிலும் அசல் படத்தை விஞ்சிவிட்டது. எழுத்து, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப உருவாக்கம், இசை, உலக வடிவமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறையற்றவை... ஆனால், உணர்ச்சிப்பூர்வமான சவால்கள்தான் படத்தை உண்மையிலேயே நிலைநிறுத்துகின்றன. உணர்ச்சிகளால் நிரம்பிய உண்மையான பதற்றத்தை உருவாக்கும் திருப்பங்களை, எழுத்து நேர்த்தியாகப் பின்னுகிறது.
ஆதித்யா தார், நீங்கள் அசத்திவிட்டீர்கள். 4 மணி நேர நீளமுள்ள ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிட தைரியம் வேண்டும். கடைசி பிரேம் வரை பார்வையாளர்கள் இருக்கையில் கட்டிப்போடப்பட்டிருக்கிறார்கள்.
ரன்வீர், என்னவொரு நடிப்பு... தொடக்கத்தில் சகோதரியுடன் வரும் காட்சி நடிப்பு மாஸ்டர்கிளாஸ். அங்கிருந்து இதயத்தை உருகவைக்கும் கிளைமாக்ஸ் வரை ஹம்சாவாகவும் ஜஸ்கீரத்தாகவும் நீங்கள் எங்களை மெய்மறக்க செய்துவிட்டீர்கள்.
நடிகர் மாதவன் அவர்களே, ஒரு தேசத்தின் கையறுநிலையையும் விரக்தியையும் நீங்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதால், உங்கள் வெற்றியை நாங்கள் எங்களுடையதாக உணர்ந்தோம். இந்த மகத்தான வெற்றிக்கு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..." என்று துரந்தர் 2 படத்தை பாராட்டி எஸ்எஸ் ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.