1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படமான ‘அன்னக்கிளி’ வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இசைப்பயணத்தில் 50 ஆண்டுகள் கடந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசை உலகில் அரை நூற்றாண்டை கடந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இளையராஜா. இளையராஜா “உங்களுக்குதான் 50 வருடம். எனக்கு அப்படி எதுவும் இல்லை. அடுத்தடுத்து படங்களில் பணியாற்றி வருகிறேன். வருடம் தான் சென்று கொண்டிருக்கிறதே தவிர, நான் அங்கேயேதான் இருக்கிறேன். நான் எப்போது எங்கிருந்து வந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன். நீங்கள் நினைவு வைத்து வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எல்லோரும் இசைக்கடவுளாக பார்க்கிறார்கள், பார்த்துகொள்ளட்டும். அவர்கள் என்னை அந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்ற அன்பை காட்டுகிறது. நான் இசையமைக்கும்போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. மனஅமைதியை கொண்டு வருவதே இசை. நான் இல்லாவிட்டாலும் என் இசை என்றென்றும் வாழும். நான் தனியாக முதலில் இசை அமைத்த போது, எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. பல நாட்கள் பயிற்சிக்கு பிறகே அன்னக்கிளி பாடல்கள் வந்தது. கோயிலுக்கு போவதை விட இசை மிகவும் புனிதமானது. அதனால் தான் மக்கள் என்னை என்னென்னமோ சொல்லி கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் என்றென்றும் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.” என்றார்.