சினிமா செய்திகள்

“26 ஆண்டுகள் சினிமா பயணம்!” – பூரி ஜெகன்நாத் குறித்து விஜய் சேதுபதி புகழாரம்

இயக்குனர் பூரி ஜெகன்நாத் அவர்களின் சினிமா பயணத்தை பாராட்டி நடிகர் விஜய் சேதுபதி மனமார்ந்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பூரி ஜெகன்நாத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். தெலுங்கு திரையுலகில் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் மாஸ் கமர்ஷியல் படங்களுக்காக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக லைகர் படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ஸ்லம்டாக் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், சினிமாவில் பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பூரி ஜெகன்நாத் அவர்களின் சினிமா பயணத்தை பாராட்டி நடிகர் விஜய் சேதுபதி மனமார்ந்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த மனிதருக்கு இது என்னவொரு பயணம்! சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல; அது துணிச்சல், உறுதி மற்றும் அச்சமற்ற குரலால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் பூரி ஜெகன்நாத் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். “நடிகர்களாகிய நாங்கள் எங்களை நம்பி, எங்களின் இயல்பான எல்லையைத் தாண்டிச் செல்லத் தூண்டும் இயக்குநர்களையே எப்போதும் தேடுகிறோம்; அதை நீங்கள் எளிதாகச் செய்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் தங்களுடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு சிறப்பான நினைவாக இருக்கும் என்றும் விஜய் சேதுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறுதியாக, பூரி ஜெகன்நாத் அவர்களின் தொடர்ச்சியான வெற்றிக்கும், மேலும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் கதை சொல்லலுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT