‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ‘வாரிசு’ பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ள இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். ‘ஜவான்’ படத்தை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் நடிக்க உள்ளதால், ரசிகர்களிடம் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. ‘ரைஸ் ஆப் மஹாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசரில் பிரமாண்டமான காட்சிகள் இடம்பெற்றிருந்த இந்த டீசர் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு, பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நடிகைக்காக அமைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இதுவெனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் தியேட்டரில் இந்தியாவிலேயே முதன்முறை நடிகை நயன்தாராவுக்குத்தான் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாராவை தவிர்த்து இதுவரை வேறு எந்த நடிகைக்கும் இப்படியொரு கட் அவுட் வைக்கப்படவில்லை என்கின்றனர்.