சென்னை,
வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், 'ராமாயணா' திரைப்படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமைக்காக தயாரிப்புத் தரப்பு ஆரம்பத்தில் ரூ.500 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய சினிமாவில் புதிய வணிக சாதனை படைக்கும் படம் இதுவாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இதையடுத்து நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு இந்தி விநியோக உரிமையை இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.