சினிமா செய்திகள்

ரசிகர் கன்னத்தை பிடித்து கிள்ளியது அன்பின் வெளிப்பாடு - நடிகை ரச்சிதா ராம்

ரச்சிதா ராமுடன் செல்பி எடுத்த ரசிகர் நடிகையின் கன்னத்தை பிடித்து கிள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர் ரச்சிதாவின் கன்னத்தை பிடித்து கிள்ளிய விவகாரத்தை நடிகை இயல்பாக எடுத்துக்கொண்ட போதிலும், இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

கன்னத்தை பிடித்து கிள்ளிய ரசிகர்

கன்னட திரை உலகில் பிரபல நடிகையான ரச்சிதா ராம் தனது 34-வது பிறந்தநாளை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள் புடைசூழ திருவிழா போல் கொண்டாடினார். அப்போது, ரச்சிதா ராம் ஒவ்வொரு ரசிகருக்கும் செல்பி எடுக்க வாய்ப்பளித்தார். அந்த நேரத்தில், ஒரு ரசிகர் அவரிடம் நெருங்கி வந்து செல்பி எடுத்தார். செல்பி எடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்போது, அவர் ரச்சிதா ராமின் கன்னத்தை பிடித்து கிள்ளினார். அந்த நொடியில், ஒரு கணம் அதிர்ச்சியடைந்த ரச்சிதா ராம், இவர் யார் என்று யோசித்தவாறே லேசாக கோபமாக சிரித்துவிட்டு அமைதியானார். நடிகையின் கன்னத்தை ரசிகர் கிள்ளிச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே கொண்டாட்டத்தின் போது மற்றொரு ரசிகர் எல்லை மீறி அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றபோது, தன்னைத் தொட வேண்டாம் எனக் கூறி அவருக்கு நடிகை எச்சரிக்கை விடுத்தார்.

ரச்சிதாராம் பேட்டி

இது குறித்து பேசிய நடிகை ரச்சிதா ராம் “என் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை. இதை பார்த்த என் நண்பர்கள், உனக்கு கோபம் வரவில்லையா? என்று கேட்டனர். ஒருவர் குழந்தையை கொஞ்சி அன்புடன் அரவணைப்பது போன்று தான் என் ரசிகரும் அன்பை வெளிப்படுத்தினார். அதில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை. ஒருவேளை அதுதவறான தொடுதலாக இருந்திருந்தால், நிச்சயமாக நான் கண்டித்திருப்பேன். ஆனால், ஒருவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும்போது அதை நான் எப்படி கண்டிக்க முடியும்?. நான் அதை ஒரு பாராட்டுதலாக எடுத்துக் கொண்டேன். உண்மையில், அந்த அன்பை நான் மிகவும் ரசித்தேன்” என்றார்.

ரச்சிதா ராம் இந்த விவகாரத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட போதிலும், இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர் ரசிகர்களின் அன்பை நடிகை புரிந்து கொண்ட விதம் பெருந்தன்மையானது என பாராட்டியுள்ளனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், ரசிகராக இருப்பதற்காக எந்த ஒரு பொது பிரபலம் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவரது உடலை தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சுட்டிக்காட்டி, பிரபலங்களின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கன்னட திரையுலகில் கடந்த 2013ம் ஆண்டு நடிகர் தர்ஷனின் ‘புல்புல்’ என்ற படத்தின் மூலம் நடிகை ரச்சிதா ராம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் ரன்னா, ரத்தாவரா, பார்ஜரி, அயோக்யா, நடசர்வபௌமா, பாரதே, கிராந்தி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். தற்போது அவர் கிரிமினல், லில்லி, தாலி மற்றும் சபரி, செர்ச்சிங், பார் ராவணா உள்ளிட்ட பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT