சினிமா செய்திகள்

“ரத்தம், வியர்வை, உறக்கமற்ற இரவுகள் கலந்த படம்” – ‘கருப்பு’ படக்குழு உருக்கம்

இந்தப் பயணத்தில் எங்கள் துணையாக நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது, காத்திருந்தமைக்கு நன்றி என்று தயாரிப்பு பதிவிட்டுள்ளது.

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம், மே 14-ந்தேதி (நேற்று) வெளியாகி இருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படம் எதிர்பார்த்தபடி நேற்று வெளியாகவில்லை. சூர்யாவின் படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என்று கருப்பு சட்டை அணிந்து நேற்று காலை முதலே ஆர்வமாக தியேட்டரை நோக்கி படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் 'கருப்பு' படம் ரிலீசாகாத விரக்தியில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் போஸ்டரை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், "காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கும் சில பயணங்கள் உண்டு. 'கருப்பு'படத்திற்காகக் காத்திருந்த, படம் குறித்துத் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருந்த, மவுனமும் தாமதங்களும் சூழ்ந்திருந்த காலத்திலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் ஒரு மன்னிப்பையும், அதைவிட முக்கியமாக, எங்கள் நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.

இந்தக் காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தப் படத்தை மிகுந்த அன்போடும் எதிர்பார்ப்போடும் நெஞ்சில் சுமந்திருந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாகவே அழுத்தியது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்கள் ஆதரவும், உங்கள் செய்திகளும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்புமே இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

இன்று, நிறைந்த இதயத்தோடும், நன்றிக் கண்ணீரோடும் நாங்கள் இறுதியாக அறிவிக்கிறோம். 'கருப்பு' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்தப் படத்தில் எங்கள் ரத்தமும், வியர்வையும், உறக்கமற்ற இரவுகளும், போராட்டங்களும், உணர்வுகளும் கலந்திருக்கின்றன. இது இனி வெறும் எங்கள் கதை மட்டுமல்ல — இந்தப் பயணத்தில் எங்கள் துணையாக நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது. காத்திருந்தமைக்கு நன்றி. நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.