சென்னை,
‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீடாக இப்படத்தை கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள யாஷ், தற்போது ‘டாக்ஸிக்: எ பேரி டேல் பார் குரோன்-அப்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
‘டாக்ஸிக்’ டீசர் மற்றும் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் அதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. அதேநேரத்தில், டீசர் மற்றும் டிரெய்லர் அதிக பார்வைகளைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.
ரத்தம் தெறிக்கும் வகையிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘டாக்ஸிக்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீடாக இப்படத்தை கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘டாக்ஸிக்’ படத்திற்கான முன்பதிவு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாஷ்ஷின் பான் இந்தியா மார்க்கெட்டுக்கு இந்த பிரம்மாண்டமான வெளியீடு மேலும் வலு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.