சென்னை,
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக, இந்த முறை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோருடன் யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கான கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்பு பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புத் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.