சென்னை,
வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.375 கோடியைத் தாண்டி வசூல் செய்திருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மூன்றாவது நாளில் இந்திய அளவில் ரூ.69.80 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் ரூ.218.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.157.25 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.375.50 கோடியாக உயர்ந்துள்ளது.
வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.375 கோடியைத் தாண்டி வசூல் செய்திருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் 'ராமாயணா' படத்தின் வசூல் மேலும் புதிய சாதனைகளைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் ஏற்பட்டுள்ளது.