சினிமா செய்திகள்

தனியாக இருந்தபோது மூக்கைப் பிடித்த மர்ம உருவம்! - ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்த திகில் அனுபவம்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக நடித்துள்ளார்.

சென்னை,

எனக்கு எனர்ஜி மீது நம்பிக்கை உண்டு. நல்ல சக்தி, தீய சக்தி என இருவிதமான சக்திகள் இருப்பதாக நம்புகிறேன். எனக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், 2005-ம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'கண்ஜூரிங் கண்ணப்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ரெஜினா, தற்போது எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

வில்லியாக மிரட்டும் ரெஜினா

அஜித்குமார் நடிப்பில் வெளியான 'விடாமுயற்சி' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்-2' படத்திலும் வில்லியாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இப்படத்தில் நயன்தாராவுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு நேர்ந்த திகில் அனுபவம்

இந்நிலையில், தனது திரைப்பயணம் மற்றும் அமானுஷ்ய அனுபவம் குறித்து ரெஜினா கசாண்ட்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "21 ஆண்டு கால திரைப்பயணத்தில் நிறைய மேடு பள்ளங்களைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் உறுதியுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறேன். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஒருபோதும் தயங்கியது கிடையாது. 'மூக்குத்தி அம்மன்-2' படத்திலும் கவர்ச்சியான வில்லியாக நடித்திருக்கிறேன். சினிமாவுக்காக எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு சினிமாதான் எல்லாமே.

எனக்கு எனர்ஜி மீது நம்பிக்கை உண்டு. நல்ல சக்தி, தீய சக்தி என இருவிதமான சக்திகள் இருப்பதாக நம்புகிறேன். எனக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது அந்த அறையில் நான் மட்டும்தான் இருந்தேன். திடீரென யாரோ ஒருவர் என் அருகில் வந்து மூக்கைப் பிடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. உடனே திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். ஆனால், அங்கு யாருமே இல்லை. ஒருவேளை அது ஏதாவது ஒரு சக்தியாக இருக்குமோ என்று யோசித்துவிட்டு மீண்டும் படுத்தேன்.

சவாலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் எனது மற்றொரு பரிமாணத்தை ரசிகர்கள் பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT