சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன், தனது நற்பணி இயக்க நிர்வாகிகளைச் சென்னையில் பிரம்மாண்டமாகச் சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் "சேயோன்" படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மேம்படுத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலம் ரத்ததானம், கல்வி உதவி மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இடையிடையே தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நற்பணி இயக்க நிர்வாகிகளையும் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி, சென்னை முகலிவாக்கத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா மேடை உள்ளிட்ட விஷயங்கள் அரசியல் மாநாடு போல் பிரமாண்டமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து, தொண்டர்கள் போல் கூட்டமாக பங்கேற்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சிவகார்த்திகேயன் பேசியதாவது;-
நன்றாகப் படியுங்கள், நன்றாகச் சம்பாதியுங்கள். குடும்பம்தான் முதலில்! தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க, அது நம்மளை மேம்படுத்தும். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்கும், அது ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும்.
சேயோன் படத்தின் 60 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பு பணிகள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் முழுமையான அதிரடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.
"என்ன செஞ்சாலும் குறை சொல்றவன் குறை சொல்லிட்டு தான் இருப்பான். நம்ம நம்ம வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும் அது இல்லாம நான் என்ன செஞ்சாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு ஒரு நதி தன்னோட வழியே உருவாக்கிக்கிட்டு அது பாட்டு போயிட்டே இருக்கும் அதே மாதிரி நாம நம்மளோட வேலையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாடு போன்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை சட்டை அணிந்து கட்சித் தொண்டர்களைப் போல உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அண்மைக் காலங்களாக நடிகர்கள் தனுஷ், சூர்யா ஆகியோர் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துத் தொடர் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் மாநிலம் தழுவிய அளவில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளைத் திரட்டி மாநாடு பாணியில் இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருப்பது அரசியலிலும் சினிமா துறையிலும் கவனத்தை பெற்றுள்ளது.