நடிகைகளை துரத்துவதற்கு என ஒரு கூட்டமே இருக்கிறது. எப்போது தவறு செய்வார்கள்? விமர்சிக்கலாம்... என கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறார்கள் என்று மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்தியில் சின்னத்திரை தொடர்களில் கலக்கி, பின்னர் பாலிவுட் சினிமாவில் எட்டிப் பார்த்தவர், மிருணாள் தாக்கூர். துருதுருவென நடிக்கும் மிருணாள் தாக்கூருக்கு ரசிகர்களும் ஏராளம். பாலிவுட் படங்களில் மட்டுமே கலக்கி வந்தவர், தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார். அங்கும் பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவிலும் கலக்க துடிக்கும் மிருணாள் தாக்கூர், விரைவில் தமிழிலும் களமிறங்க போவதாக பேச்சு அடிபடுகிறது.
இவர் நடித்த ‘சீதா ராமம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘பேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருந்தார். ‘டகோயிட்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மிருணாள் தாக்கூர் தனது திரைப் பயணம் குறித்து பகிர்கிறார். அதில் “சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. சின்னத் திரையில் நடிக்கும்போதே. சினிமா நடிகை போன்று மெனக்கெட்டு நடிப்பேன். 'கொடுத்த சம்பளத்துக்கு மேல் நடிக்கிறாரே...' என என்னை கேலியும், கிண்டலும் செய்வார்கள். திடீரென அதிர்ஷ்டம் என்னைத் தேடி வந்தது. கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதுதான் சினிமா வாய்ப்பு. இந்த சினிமா எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்தது. என்னை பெரிய பிரபலமும் ஆக்கியது.
என்னைப் பொறுத்தவரை சினிமாவில் கஷ்ட நஷ்டங்களை, விமர்சனங்களை கடந்து என் பாதையில் பயணிக்கிறேன். நடிகர்களை விட நடிகைகளைத்தான் அதிகமாக விமர்சிப்பார்கள். இங்கு நடிகைகளை துரத்துவதற்கு என ஒரு கூட்டமே இருக்கிறது. எப்போது தவறு செய்வார்கள்? விமர்சிக்கலாம்... என கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறார்கள். இது நடிகைகளுக்கும் தெரியும். கோபம் கொண்டு வார்த்தைகளை பலரும் கொப்பளித்து விடுவார்கள். என்னை போன்ற சிலர் 'பேசிவிட்டு போ...' என்ற ரீதியில் விலகிவிடுவார்கள்.
எனக்கு வந்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இவருடன் காதல், அவருடன் டேட்டிங் என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள். இன்னும் எல்லை தாண்டியும் பேசிவிட்டார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். நான் நதி போல செல்கிறேன். நீங்கள் கற்களை வீசினாலும், பூக்களை வீசினாலும் நான் என் வேலையை பார்த்துக் கொண்டே இருப்பேன். என்னை பொறுத்தவரை எல்லாவற்றையும் மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதைவிட எதையும் கண்டுகொள்ளாமல் செல்லவும் இந்த சினிமா எனக்கு நன்றாகவே கற்றுக்கொடுத்து இருக்கிறது. எனவே எத்தனை விமர்சனங்களை அம்புகள் போல என்னை நோக்கி பாய்ச்சினாலும் 'ஐ டோண்ட் கேர்' என்றுதான் சொல்வேன்” என்று மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்.