டெல்லி,
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக டெல்லியில் சிறப்புத் திரையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தை வெளியீட்டு நாளான நவம்பர் 5-ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காகத் திரையிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சிறப்புத் திரையிடல் நடைபெறுவது உறுதியானால், நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாசார மையத்திலும் (NMACC) சிறப்புக் காட்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ராஷ்டிரபதி பவனில் சிறப்புத் திரையிடல் நடைபெறுவது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பிலோ, படக்குழுவினரிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.