சினிமா செய்திகள்

விஷால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இன்று வெளியாகும் ‘மகுடம்’ அறிவிப்பு!

‘மகுடம்’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்டிருந்த அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘மகுடம்’ திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ‘மகுடம்’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்ததாக இருக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால், இன்று மாலை வெளியாகவுள்ள அப்டேட் மீது திரையுலக ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.