அசுதோஷ் கோவாரிக்கர் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான படம் ‘லகான்’. அமீர்கான் தயாரித்திருந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
1893ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் கடும் வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் அதை தவிர்ப்பதற்காகப் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியோடு கிரிக்கெட் கற்றுக்கொண்டு விளையாடும் பின்னணியில் உருவாகியிருந்த இப்படம் மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக உருவாகியிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
திரைக்கதை, இசை, கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப துறையிலும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் இசை, ஒலிப்பதிவு என மொத்தம் 8 தேசிய விருதுகளை வென்றிருந்தது. அதோடு ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி நாமினேஷன் வரை சென்றது. இதுவரை இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்களில் நாமினேஷனுக்கு தேர்வான படங்களில் இதுவும் ஒன்று.
இந்நிலையில், ‘லகான்’ படம் வெளியாகி வரும் ஜூன் 15ஆம் தேதியுடன் 25 ஆண்டுகளைக் கடக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக படத்தை படக்குழுவினர் ரீ- ரிலீஸ் செய்யவுள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்படம் ஜூன் 12, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மட்டும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.