சென்னை,
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.டிரெய்லரில் செம்மரக் கடத்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள குற்றப் பின்னணி முக்கியக் கதைக்களமாக இடம்பெற்றுள்ளது.
‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரெய்லரில் செம்மரக் கடத்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள குற்றப் பின்னணி முக்கியக் கதைக்களமாக இடம்பெற்றுள்ளது. இதில் தனுஷ் மரம் வெட்டும் தொழிலாளியாக நடித்துள்ளார். எதிர்பாராத விதமாக செம்மரக் கடத்தல் கும்பலின் பின்னணியில் அவர் சிக்கிக்கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் காவல்துறையின் நடவடிக்கைகளும் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளன.
இப்படத்தில் சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். செம்மரக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து முறியடிக்கும் ‘ஆபரேஷன் மோல்’ என்ற நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்குகிறார். அவரது அதிரடியான தோற்றமும், விசாரணைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மம்முட்டி இப்படத்தில் அரசியல் பின்னணியைக் கொண்ட செல்வாக்கு மிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தனுஷுக்கும் மம்முட்டிக்கும் இடையிலான மோதல் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மேலும், நஸ்ருதீன் ஷாவின் கதாபாத்திரம் குறித்த சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
‘ஓம் - ஆபரேஷன் மோல்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் திட்டத்தில் முதல் பாகமாக தயாராகியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து தனுஷ், மம்முட்டி மற்றும் சாய் பல்லவியின் நடிப்பைப் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.