நடிகர் ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ஸ்பை திரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் காட்சி வீடியோவை பகிர்ந்து தனது வாழ்க்கையின் சவாலான காட்சி என தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா. அதில் “இந்த தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பே ஒரு ‘மிஷன் இம்பாசிபிள்’தான். என் சினிமா வாழ்க்கையில் மிகக் கடினமான நாள் இதுதான். 20 அடி ஆழ நீச்சல்குளத்தில் குளிரில் நடுக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, மூச்சை அடக்கி இந்த காட்சி படமாக்கப்பட்டது. இத்தனை முயற்சிக்கும் அது வொர்த் ஆனது.” என்று கூறியுள்ளார்.