சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா - நடிகர் பாலா

என்னை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் என்று நடிகர் பாலா சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் 'அன்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'கலிங்கா', 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கோகிலா என்ற தனது உறவுக்கார பெண்ணை சட்டப்படி மணந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென இவர் வெளியிட்ட வீடியோவில், “எனது திருமண வாழ்க்கைக்குப் பிறகு பல உண்மைகளை நான் வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மவுனம் காத்ததற்கு காரணம் சில நபர்களின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவே. என் அமைதியைப் பயன்படுத்தி வெறும் வியூஸ்களுக்காகத் என்னைப் பற்றி தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடமாக இதனால் மன உளைச்சல்களைச் சந்தித்து வருவதுடன் சட்டப் போராட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறேன். இனியும் இதுபோன்று என் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் போட்டு உடைக்கப் போகிறேன். அப்படி என்னிடம் இருந்து உண்மைகள் வெளிவரக்கூடாது என நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக எனக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடலாம்” என கனத்த இதயத்துடன் தெரிவித்து இருந்தார். இது வைரலானது.

மேலும் இது குறித்து பாலா “எனது முன்னாள் மனைவி அம்ரிதாவை சட்டப்படி கோர்ட் மூலம் விவாகரத்து செய்துவிட்டேன் இப்போது மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார். சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. என்னவென்று கேட்டோம் அம்ரிதா பணம் கேட்பதாக சொன்னார்கள். விவாகரத்து செய்த பிறகு இப்போது எப்படி பணம் தர முடியும் என கேட்டோம். அவர் கேட்ட பணம் எவ்வளவு தெரியுமா ரூ.120 கோடி என்னால் தாங்க முடியல, ரொம்ப டார்ச்சரா இருக்கு. வழக்கு, வழக்கு என எவ்வளவு வழக்கை தான் நான் சந்திப்பேன். அதனால் தான் வீடியோவில் விஷம் வைத்து என்னை கொன்று விடுங்கள் என்றேன்.

சட்டப்படி விவாகரத்து பெற்று முடிந்த கேஸை திரும்ப எடுக்க கூடாது, ஆனால் எப்படி எடுக்குறாங்கனு தெரியல. இப்படியே போனால் நானும், என் மனைவியும் தற்கொலைதான் செய்யணும். எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம், நானும், என் குழந்தையும் நிம்மதியா வாழ்ந்தா போதும் என கூறிவிட்டு போன அம்ரிதா இப்போது எதற்கு ரூ.120 கோடி கேட்கிறார். இந்த தருணத்தில் இன்னொரு உண்மையும் சொல்கிறேன். நான் மருத்துவமனையில் சாககிடந்த சமயத்தில் கொஞ்சம் உயிர் பிழைத்து வந்ததும் என் கையில் இருந்த 10 லட்சத்தையும் என் மகள் பெயரில் 'எப்டி' போட்டுவிட்டேன். பாசம் இல்லாமலா அப்படி செய்வேன். நான் கெட்டவனா, என் மனசாட்சிபடி என் மகளுக்கு செய்தேன். நான் நிம்மதியா இருந்தால் போதும். அதைத்தான் எதிர்பார்கிறேன்” என்று பாலா தெரிவித்தார்.

பாடகி அம்ரிதாவை காதலித்து 2010ல் திருமணம் செய்த பாலா 2019ல் விவாகரத்து பெற்று அவரை பிரிந்துவிட்டார். இருப்பினும் அவ்வப்போது இவரால் சில பிரச்னைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து சமீபத்தில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.