சினிமா செய்திகள்

தான் படித்த பள்ளிக்கு 3 மாடி கட்டிடம் கட்டிகொடுத்த நடிகர் தனுஷ்

தான் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் செயல்பட்டு வரும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கு தனுஷின் அன்புப் பரிசு

திரைப்படப் பணிகளுக்கு நடுவிலும், தான் கல்வி கற்ற பள்ளிக்காக நடிகர் தனுஷ் செய்துள்ள செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் செயல்பட்டு வரும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்த பழைய மேற்கூரை கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதன் இடத்தில் இந்த நவீன கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அந்த கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தான் படித்த பள்ளிக்கான நன்றிக்கடன்

நடிகர் தனுஷ், தனது பத்தாம் வகுப்பு வரை இதே பள்ளியில்தான் கல்வி பயின்றார். தான் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்துள்ள அவரது செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், அவருடன் பள்ளியில் பயின்ற ஒளிப்பதிவாளர் குமரன், 1999-ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலாகீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற தனுஷ்

விழாவில், தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை சந்தித்த தனுஷ், ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் ஆசிரியர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். தான் கல்வி கற்ற பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்ததுடன், தன்னை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய தனுஷின் இந்த செயல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.