நடிகர் மம்முட்டி , ‘டோரதி’ திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து , சூர்யா உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது.
இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், துணிச்சலான கதைகளத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் மம்முட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரை நேரில் அழைத்து ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ், “டோரதி படம் குறித்தான உங்கள் வாழ்த்துகளுக்கும் நேரத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி மம்முட்டி சார். நீங்கள் எப்போதும் உத்வேகத்தை அளிக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ படம் உலக அளவில் முதல் வாரத்தில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.