சினிமா செய்திகள்

யாராவது என்னை வசைபாடினால்... எச்சரிக்கை விடுத்த நடிகர் நட்டி நடராஜ்

நடிகர் நட்டி நடராஜ் ‘இனிமேல் தன்னை யாராவது வசைபாடினால் திரும்ப அவர்களை வசைபாடுவேன்’ என தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி நடராஜ் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். உமாபதி ராமையா இயக்கத்தில் நட்ராஜ் நடித்துள்ள ‘டிஎன் 2026’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ந் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 30ந் தேதி அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி தளங்களில் வெளியானது.

‘டிஎன் 2026’ படத்தின் டீசரில் ‘சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!’ போன்ற வசனங்கள் இடம்பெற்றன.

நட்டி நட்ராஜ்ஜின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த விவாதம் அதிகரித்தது. மேலும், 'விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்துள்ள தணிக்கை வாரியம், அவரை அசிங்கப்படுத்தும் இப்படத்தை எப்படி வெளியிடலாம்? என,த.வெ.க.,தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார். இயக்குனர் உமாபதி ராமையா விஜயை விமர்சிக்கும் வகையில் ‘டிஎன் 2026’ படத்தை எடுக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார் .

நட்டி நடராஜ் “டிஎன் 2026 படத்துல எந்தக் கட்சியையும் தாக்கல. எந்த் தலைவரையும் குறைசொல்லலை. இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படம். இந்தப் படத்தில் ஒரு தனி மனித தாக்குதலும் இல்லை. ஒரு குறிப்பிட்ட தலைவரை பத்தின படமோ கிடையாது” என்று கூறியிருந்தார்.

‘டிஎன் 2026’ படத்தின் காட்சிகள் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்களுக்கும் இவருக்கும் எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், நட்டி நடராஜ் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘யாராவது என்னிடம் ஆபாச மொழிகளைப் பயன்படுத்தினால் நானும் பயன்படுத்துவேன்’ என்று கூறியிருந்தார். மற்றுமொரு பதிவில், ‘கடைசி எச்சரிக்கை. இனிமேல் யாராவது என்னை வசைபாடினால் நானும் அவர்களை வசைபாடுவேன். என்ன நடந்தாலும் கவலையில்லை’ என கூறியுள்ளார். இதற்கும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.