சென்னை,
சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தி.நகர் வண்டிக்காரன் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. வறுமையில் வாடினாலும், நேர்மை தவறாத பத்மா, உடனடியாக தங்க நகைகள் இருந்த அந்த பிளாஸ்டிக் கவரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனை செய்ததில், அதில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தங்க நகைகளை தொலைத்ததாக முன்பே புகார் அளித்தது கண்டறியப்பட்டது. அவர் அளித்த ஆவணங்கள் சரிபார்த்த பின்னர், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்மாவின் இந்த செயலை பாராட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் தூய்மைப்பணியாளர் பத்மாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தூய்மைப்பணியாளர் பத்மாவிற்கு பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து அவரை கவுரவப்படுத்தினார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்...” என்று தெரிவித்துள்ளார்.