பெங்களூரு,
நடிகர் பிரகாஷ் ராஜ், 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துவருகிறார். மேலும், இன்னும் சில நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தனது கருத்தை வலுவாக வைக்கக்கூடியவராக வலம் வருகிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதாவது, இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபருக்கு, ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரகாஷ்ராஜிடம் 4 வாக்காளர் அட்டை இருப்பதாக கூறப்படுவதால், அதுபற்றி பெங்களூருவை சேர்ந்த வக்கீலான திலீப்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுபோல், நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமும் வக்கீல் திலீப்குமார் புகார் அளித்திருந்தார். தேர்தல் ஆணையமும் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலீப்குமார் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பிடிவாரண்ட் குறித்த செய்தியை பகிர்ந்த பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “போலியான செய்திகளை தயாரித்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலையில் அவர்களை மும்முரமாக வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.