சினிமா செய்திகள்

அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது - நடிகர் ராகவா லாரன்ஸ் பரபரப்பு பதிவு

அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை தான் எடுத்து வைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. இப்படி ஒரு தகவல் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இது பற்றிய ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இது தொடர்பான ஒரு முக்கியமான முடிவை ஜூன் 11-ந்தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி நேற்று அறிவிக்க இருந்த முக்கிய முடிவை ஒரு நாளைக்கு (அதாவது இன்று) தள்ளிவைப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் முக்கியமான அடியை தான் எடுத்து வைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எதையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை நேர்மையாகச் செய்யுங்கள். எனக்கு உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை.

நான் அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை.

நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், நான் ஒரு தனிநபராகச் செய்து வருவதை விடப் பெரிய அளவில் சமூகத்திற்குச் சேவை செய்ய, அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பது மட்டுமே என் ஒரே எண்ணமாக இருந்தது.

இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.

இன்று காலை 10 மணிக்கு நான் பகிரும் இந்தக் காணொளியில், அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயின் கண்ணோட்டம், மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி, என் இதயத்திலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.

காணொளியை இறுதிவரை பார்த்து, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை நான் எடுத்து வைக்கும் வேளையில், உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.