சினிமா செய்திகள்

நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் ரவி மோகன்

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, கடந்த மே 16-ல் ஊடகங்களில் திருமண தகறாறு கருத்துகளை நடிகர் ரவி மோகன் பேசியிருந்தார்.

சென்னை,

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் கெனிஷா அறிவித்திருந்தார் .

நடிகர் ரவி மோகன் கடந்த மே 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மூன்றெழுத்து நடிகை தான் தன் வாழ்க்கையை கெடுத்தார், தனது மகன்களை பார்க்க விடுவதில்லை என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ரவி மோகன் பேசும்போது, “சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை" என்று பேசியிருந்தார்.

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மனப்பூர்வமாக மன்னிப்பு கோரி பத்திரிகையில் ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் பத்திரிகையில் மன்னிப்பு கோரி அறிவிப்பு வெளியிட்ட ஆவணமும் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது.

‘தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.