சினிமா செய்திகள்

“அரசன்” படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய சமுத்திரக்கனி

நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை ‘அரசன்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘அரசன்’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார். சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அப்பிரச்னை முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தன் பிறந்த நாளை ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். இதில், வெற்றி மாறன், சிலம்பரசன், ஆண்ட்ரியா, யோகி பாபு உள்பட வடசென்னை நடிகர்களும் உடனிருந்தனர். சமுத்திரக்கனி திருமண கோலத்தில் இருப்பதால் ராஜன் மறைவுக்குப் பின் சந்திராவை (ஆண்ட்ரியா) திருமணம் செய்யும் காட்சியாக இது இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.