சினிமா செய்திகள்

பணம் பறிக்க முதல் மனைவி நாடகம் - நடிகர் சரவணன் குற்றச்சாட்டு

நடிகர் சரவணனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரின் முதல் மனைவி குற்றம் சாட்டிய நிலையில், பணம் பறிக்கும் முயற்சியில் அவர் தன்னை மிரட்டுவதாக சரவணன் புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சரவணன்.‘வைதேகி வந்தாச்சு’, ‘சூரியன் சந்திரன்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். ‘நந்தா’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவர், 'ஜெயிலர்', 'அரண்மனை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சரவணன். பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, 2019-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கண்காணிப்பு கேமரா அகற்றம்

நடிகர் சரவணன் தற்போது சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி சூரியஸ்ரீ நேற்று மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் ‘தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சரவணன் ஆள் வைத்து அகற்றியுள்ளார். இதனால் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் சரவணன் தான் முழுக் காரணம்’ என்று சூர்யாஸ்ரீ குற்றம் சாட்டியிருந்தார்.

இது சமூக ஊடகத்தில் விவாதம் பொருளான நிலையில் சரவணன், தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் மனைவி தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார். குறிப்பாக, கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் சரவணனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரின் முதல் மனைவி குற்றம் சாட்டிய நிலையில், பணம் பறிக்கும் முயற்சியில் அவர் தன்னை மிரட்டுவதாக சரவணன் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து மவுலிவாக்கம் போலீசார், நடிகர் சரவணனிடம் விசாரித்தபோது, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பகுதியில் உள்ள செட்டிற்கு கேமரா வயர் இடையூறாக இருந்ததால் அதை அகற்றியதாகவும், தற்போது மீண்டும் பொருத்தி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மவுலிவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.