தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நடிகர் சாந்தனு. இவர் முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் அவர்களின் மகனாக திரைப்பட உலகில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் தோன்றிய அவர், ஹீரோவாக சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், மெதுவாக தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று நடிகர் சாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் சென்றிருந்தார். பின்னர் அவர், சம்பந்த விநாயகர் சன்னதியிலும், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளிலும் வழிபட்டார். மேலும் சாமி சன்னதியில் உள்ள வைகுண்ட வாசலில் இருந்து மகா தீபம் ஏற்றப்படும் அண்ணா மலையார் மலையை தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் சாந்தனுவுடன் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.