சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை, தினந்தோறும் அவரது அன்றாட பணிகளுக்கு நடுவே, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சென்று சந்தித்தார். அவர்கள் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் இணைந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள சிபி சத்யராஜ், “தமிழக சட்டமன்ற தேர்தலில் நமது மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று அவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அவரை அறிந்திருக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற முறையில், அவருடைய பணிவு, அன்பு மற்றும் எளிமை ஆகியவை இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கின்றன என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். அவருக்கு நல்ல ஆரோக்கியம், தொடர் வெற்றி மற்றும் நமது மாநிலத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு ‘மெடிடேஷன்ஸ்’(Meditations) என்ற புத்தகத்தை சிபி பரிசளித்தார். ரோமானிய பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ், தனது சுயமுன்னேற்றத்திற்காக எழுதிய இந்த புத்தகமானது, ‘ஸ்டாயிசிசம்’(Stoicism) என்கிற கிரேக்க தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. இந்த புத்தகம், வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல், இயற்கை மற்றும் மரணத்தைப் பற்றிய புரிதல் ஆகிய சிந்தனைகளை போதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.