சினிமா செய்திகள்

கிராம மக்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் ‘சேயோன்’ படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் சுதந்திர நாளை கொண்டாடியுள்ளார்.

‘சேயோன்’ திரைப்படம்

‘அமரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படப்புகழ் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

மதுரை பின்னணியில் உருவாகும் கிராமத்து கதை

மதுரை மண்ணின் பாரம்பரியப் பின்னணியைக் கொண்ட ஒரு பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி இப்படத்தில் இணைந்துள்ளார்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

‘சேயோன்’ திரைப்படத்தின் 2ம்கட்ட படப்பிடிப்பு மதுரையில் மீண்டும் தொடங்கப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய ஆக்சன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகி்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராம மக்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.