மதுரை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரையில் தங்கியுள்ள அவர், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையும் மதுரையிலேயே கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சேயோன் படப்பிடிப்பிற்காக மதுரை வந்துள்ளோம். அதனால் இந்தத் தீபாவளி இங்கு தான். மதுரை எப்போதும் ஸ்பெஷல்தான். மதுரைதான் என்னுடைய மாமனார், மாமியாரின் சொந்த ஊர். இந்த ஊரின் மாப்பிள்ளை என்று சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்" என்றார்.
மேலும், 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் வரை மதுரையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.