சென்னை,
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கருடன், நந்தன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த 'டூரிஸ்ட் பேமலி' படம் மாபெரும் வெற்றி பெற்றது.
“ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ படம் நேற்று வெளியானது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை நேரடியாகவும் நுட்பமாகவும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. கிராமிய பின்னணியில் மனித உறவுகள், நீதிக்கான போராட்டம் மற்றும் சமூக அமைப்பின் மறுபக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது என கூறப்படுகிறது
திரையரங்குகளில் நேற்று வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘மை லார்ட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி படக்குழுவை அழைத்து அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.