சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து உள்ளார். சர்வானந்த் மற்றும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பைக்கர்’. யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் ராஜசேகர், பிரமாஜி மற்றும் நடிகை மாளவிகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் திரைப்படமாக ‘பைக்கர்’ உருவாகி இருக்கிறது. சர்வானந்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்துள்ளார். ரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் அத்துல் குல்கர்னி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘பைக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.
இந்த டிரெய்லரின் ஆரம்பத்திலேயே, இந்திய பந்தய வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று ஒரு வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் கேள்வி எழுப்புவதோடு காட்சிகள் அதிரடியாகத் தொடங்குகின்றன. இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் பைக் ரேஸராக சர்வானந்த் மிரட்டியுள்ளார். செண்டிமெண்டாக தந்தை – மகன் உறவும் இடம்பெற்றுள்ளது. இதில் சர்வானந்துக்குத் தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராகவும் ராஜசேகர் நடித்துள்ளார்.