சினிமா செய்திகள்

`பாக்கெட் நாவல்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி

'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி 'பாக்கெட் நாவல்' படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தனித்துவமான இயக்குநர்

தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

வெற்றிக் கூட்டணி

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவு

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

டப்பிங் பணியில் விஜய் சேதுபதி

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 'பாக்கெட் நாவல்' படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT