தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சியான் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த சிறப்பு நாளில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், விக்ரம் தனது ரசிகர்களுக்காக அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா வாய்ப்பு தேடி அலைந்த விக்ரம். ‘என் காதல் கண்மணி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம் போன்ற படங்களில் நடித்துவந்த விக்ரமிற்கு ஒரு அடையாளத்தை தந்த படம் தான் ‘மீரா’ இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் விக்ரம் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.
அதனைத்தொடர்ந்து ‘புதிய மன்னர்கள்’ போன்ற படங்களில் நடித்து வந்த விக்ரமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படம். அந்த படம், விக்ரமின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுடன் "சியான்" என்ற பெயரையும் ரசிகர்களிடையே நிலைநிறுத்தியது. அதன்பிறகு பல விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்த விக்ரம், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக பல்வேறு பரிமாணங்களில் நடிக்கக்கூடிய நடிகராக கருதப்படுகிறார். ஒருகாலத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்திருந்த விக்ரம், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பும் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் அபரிமிதமான காதல்தான்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது. தமிழ் இவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது.
விக்ரமின் அடுத்த படத்தை போடி ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருன் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்தபடியாக இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து மஹான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விக்ரம் தனது ரசிகர்களுக்காக அட்டகாசமான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கூலிங் கிளாஸ் அணிந்து இளமை ததும்பும் தோற்றத்தில் விக்ரம் அன்னியன் பட ரெமோ போல இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.