மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங் கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் விமல். தற்போது இவர் திருச்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான பன்னாங்கொம்புக்கு வந்த இவர் அங்கு வாரச்சந்தை நடைபெற்றதை பார்த்தார்.
இதனையடுத்து அவர் காரில் இருந்து இறங்கி அங்கு போடப்பட்டு இருந்த காய்கறி கடையில் அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது நடிகர் விமல் ‘டேய் தம்பி இங்க வாடா...’ என ஒரு தம்பியை அழைத்து காய்கறி விற்றார். மேலும் சந்தைக்கு வந்த மக்கள் விமலை பார்த்ததும் அவரிடம் காய்கறிகளை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
விமலின் செயல் அங்கிருந்தவர்களைக் கவர உடனே அவரை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். பின்பு, அருகிலிருந்து வியாபாரிகளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்துக் கிளம்பிவிட்டார். தற்போது, இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.