சினிமா செய்திகள்

“ராமாயணா” திரைப்பட இசைவெளியீட்டு விழா: “ஊர்வசி” பாடல் பாடிய நடிகர் யாஷ்

‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ‘ராமாயணா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், யாஷ் ‘ஊர்வசி டேக்இட் ஈஸி ஊர்வசி’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சாய் பல்லவி, ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இசை வெளியீட்டு விழா

‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், ரவி துபே, நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியையொட்டி ஏ.ஆர்.ரகுமான், ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைத் தொகுப்பிலிருந்து சில பாடல்களை நேரடியாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

யாஷ் பாடிய பாடல்

யாஷ் பேசும்போது, “ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் பாடல்களுக்கு நான் நடனமாடி உள்ளேன்” என்று பேசியதுடன் காதலன் படத்தில் இடம் பெற்ற ‘ஊர்வசி டேக்இட் ஈஸி ஊர்வசி..’ பாடலின் சில வரிகளை பாடினார். இதைக்கேட்ட ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT