சினிமா செய்திகள்

நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷாலின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு- ஐகோர்ட்டில் தகவல்

நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரியும். ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மரியா கிளாட் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சங்கங்களின் பதிவாளர் ஏற்றுக் கொண்டதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுகுறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.