தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா - வடிவேலு கூட்டணி. நடிகர் பிரபு தேவா,வடிவேலு இணைந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இதில்‘மனதை திருடி விட்டாய்’ திரைப்படம் 2001ம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. 2004ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு - பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிகர் விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.பொங்கல் தினத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபுதேவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், காதலர் தினமான இன்று வடிவேலுவுடன் தான் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபு தேவா. அதாவது, பிரபு தேவாவும் வடிவேலும் நடந்து செல்கிறார்கள். அப்போது வடிவேலுவை நோக்கி, “நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை” என்ற பாடலை பாட சொல்கிறார். உடனே வடிவேலும் அந்த பாடலைப் பாடிக் கொண்டே அவருடன் இணைந்து நடந்து செல்கிறார்.