புதுடெல்லி,
டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஆலியா பட் குரல் கொடுத்துள்ளார்.
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்தது.
இதனிடையே, டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிராகவும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் இருந்து முதல் முறையாக முன்னணி நட்சத்திர நடிகை ஆலியா பட், மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஒவ்வொரு மாணவரும் தங்களுக்காக மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைக்காகவும் போராடுகிறார்கள். மாணவர்களின் தைரியமும் மன உறுதியும் என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் போராட்ட குணம், நாட்டின் எதிர்காலத்தைச் சுமக்கப் போகும் இளைஞர்களின் குரலுக்கு நாம் உண்மையிலேயே செவிசாய்க்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மாணவர்களுக்காக, மாணவர்களால்; எதிர்காலம் அவர்களுக்கே உரியது” என குறிப்பிட்டு மாணவர் போராட்டங்களுக்கு தனது ஆதரவை நடிகை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார்