சினிமா செய்திகள்

மார்பிங் புகைப்படத்துக்கு எதிராக நடிகை அன்னா ராஜன் சைபர் போலீசில் புகார்

நடிகை அன்னா ராஜனின் புகைப்படம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை அன்னா ராஜன் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற மலையாள படமான ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் லிச்சி கதாபாத்திரத்தின் மூலம் கவனம் பெற்றார். அதனை தொடர்ந்து ‘மதுர ராஜா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ரெண்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மார்பிங் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவல்

இந்த நிலையில், நடிகை அன்னா ராஜனின் புகைப்படம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அன்னா ராஜன், கேரளா காவல்துறை மற்றும் சைபர் டோம் (Cyber Dome) அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நடவடிக்கை எடுக்கப்படும் வரை பின்வாங்க மாட்டேன்"

இதுகுறித்து அன்னா ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் பின்வாங்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட பதிவுகளை யாரும் பகிரவோ, ஆதரிக்கவோ வேண்டாம். சமூக வலைதளங்களில் பொறுப்புடன் செயல்படுங்கள்" என்று ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னா ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.