சினிமா செய்திகள்

சந்தீப் கிஷனின் 'கரிகாலா' படத்தில் இணைந்த நடிகை கேத்ரின் தெரசா

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில், இயக்குநர் உகந்தர் முனி இயக்கத்தில் 'கரிகாலா' படம் உருவாகி வருகிறது.

சென்னை,

இப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா நாயகியாக நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார். ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’, ‘கசடதபற’, ‘கேப்டன் மில்லர்’, ‘ராயன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரமாண்டமான பேண்டஸி படம்

இதனைத் தொடர்ந்து, சந்தீப் கிஷன் தனது 33-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கரிகாலா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் உகந்தர் முனி இப்படத்தை இயக்குகிறார். பழமையான ‘சந்தமாமா’ நாட்டுக்கதைகளால் ஈர்க்கப்பட்டு, கற்பனை உலகைப் பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. மறைந்த ராஜ்ஜியங்கள், மாய சக்திகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராணக் கூறுகள் நிறைந்த பிரமாண்டமான உலகத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘கரிகாலா’

பிரமாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, முதல் பாகம் 2027-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதியும், இரண்டாம் பாகம் அதே ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நாயகியாக இணைந்த கேத்ரின் தெரசா

இந்நிலையில், இப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா நாயகியாக நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கேத்ரின் தெரசா, ‘கதகளி’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘சிக்மா’ படத்திலும் சிறப்பு நடனத்தில் தோன்றியிருந்தார்.

SCROLL FOR NEXT