கன்னட திரையுலகின் இளம் நடிகை திவ்யா சுரேஷ். இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-8 போட்டியாளர் ஆவார். பெங்களூருவில் வசித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை திவ்யா சுரேஷ் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை சம்பவம் பற்றியும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் பற்றிய வீடியோவையும் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நான் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 11 மணி அளவில் எனது உறவுக்கார சகோதரி ஒருவருடன் வெளியே சென்றிருந்தேன். காரில் ஏறுவதற்காக நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் எங்களை பின்தொடர்ந்து வந்தார். திடீரென்று அந்த நபர் எனது உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வாலிபரை கண்டித்தும் அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அத்துமீறினார். இதையடுத்து நானும், எனது சகோதரியும் வேகம் வேகமாக ஓடோடி சென்று காருக்குள் ஏறி அமர்ந்தோம்.
இருப்பினும் அந்த வாலிபர் தொடர்ந்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் அந்த வாலிபரை திட்டினார். ஆனால் இதனையும் அந்த வாலிபர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கில் ஆக்ரோஷமாக அநாகரிகமாக நடந்துகொண்டார். எனவே அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் செயல்பாடுகளையும் அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். அதனையும் அவர் வெளியிட்டு பெங்களூரு மாநகர போலீசாருக்கும் அந்த வீடியோவை டேக் செய்துள்ளார். நடிகைக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.