கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் எனும் படத்தில் அறிமுகமானார். பகத் பாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான அபி டாம் சிரியாக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளனர். இது தொடர்பான பதிவை நடிகை கிரேஸ் ஆண்டனி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சிறு வயதிலேயே ஒரு நல்ல வாழ்க்கையை கனவாகக் கண்டேன். அதை எப்படிச் சாதிப்பேன் என்று தெரியவில்லை… ஆனால் ஒருநாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தப் பயணம் எளிதானது இல்லை. யாரும் பார்க்காத சிரமங்கள், சந்தேகங்கள், தோற்று விடுவோம் என்று தோன்றிய நாட்களும் இருந்தன. ஆனால் நான் என்னை விட்டுவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்று இந்த காரின் சாவியை கையில் பிடிக்கும் போது, இது ஒரு வாகனம் மட்டும் அல்ல… என் உழைப்பு, நம்பிக்கை, தைரியம் அனைத்தும் சேர்ந்த பலன். கடவுள் எனக்கு மிகுந்த கருணை காட்டியுள்ளார். என் மனம் நன்றியால் நிரம்பியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.