மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஜான்வி கபூர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஜான்வி கபூர், அடிக்கடி முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இன்று அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
ஜான்வி கபூர் நடித்துள்ள பெத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள பெத்தி திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள பெத்தி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படத்தின் வெளியீட்டு நாளிலேயே ஜான்வி கபூர் திருப்பதியில் வழிபட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.