கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத் . ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான 'எமர்ஜென்சி' படத்தில் நடித்திருந்தார்.இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரணாவத்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், மறுபுறம் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இவருக்குத் திருமணமான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா ரணாவத் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இது அவர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாரோ என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் விளக்கமளித்துள்ளார். அதில் “தான் எப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும், அது ரகசியமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் ஒவ்வொரு நாளும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பில் இருக்கிறேன். யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை படப்பிடிப்பில் மேக்கப்புடன் எடுத்துள்ளனர். இப்போது எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருமணமான பெண்ணின் தோற்றத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நடிகர்கள் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள், நான் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், இது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
கங்கனா கைவசம் தற்போது பல திரைப்படங்கள் உள்ளன. அதில், பாரத் பாக்ய விதாதா திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து குயின் படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஆர். மாதவனுடன் இணைந்து அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.