சென்னை,
தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கும் புதிய படத்திற்கு 'பாக்கெட் நாவல்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜழ இசையமைக்கும் இந்தப் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய 'பாக்கெட் நாவல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.