சென்னை,
தமிழில் 'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகையாக கவனம் பெற்று வருகிறார். தற்போது நாக சைதன்யாவுடன் 'விருஷகர்மா' படத்தில் நடித்து வரும் அவர், மேலும் இரண்டு இந்தி படங்களிலும் பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், தனது பெயரில் போலி செல்பேசி எண் உருவாக்கப்பட்டு மோசடி நடைபெற்று வருவதாக மீனாட்சி சவுத்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஒரு செயலியின் திரைப்பிடிப்பு படத்தை பகிர்ந்த மீனாட்சி சவுத்ரி, "இந்த எண்ணிலிருந்து உங்களுக்கு ஏதேனும் குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால், தயவுசெய்து அது குறித்து தெரிவிக்கவும். அது நான் அல்ல. இந்த தகவலை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.