சென்னை,
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ‘மான்ஸ்டர்’, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ‘ராக் காயி’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ உள்ளிட்ட படங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், கற்பனை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், நயன்தாரா – அஜய் ஞானமுத்து கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.